Advertisement
தினமலர் முதல் பக்கம் » சிறப்பு பகுதிகள் செய்தி »இது உங்கள் இடம்
இது உங்கள் இடம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : ஜூன் 19,2013,00:00 IST

மூன்றாவது அணி உருப்படுமா?
முனைவர் எஸ்.ஸ்ரீகுமார், கல்பாக்கத்திலிருந்து எழுதுகிறார்: திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜியின் மூன்றாவது அணி முயற்சிக்கு, ஐக்கிய ஜனதா தளமும், பிஜு ஜனதா தளமும், சமாஜ்வாதி கட்சியும், தெலுங்கு தேசமும் ஆதரவு தெரிவித்துள்ளன. "லோக்சபா தேர்தலுக்குப் பின், காங்கிரஸ், பா.ஜ., அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க முயன்றால், ஆதரவு அளிப்போம்' என, மதச்சார்பற்ற ஜனதா தளமும் அறிவித்துள்ளது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், மூன்றாவது அணி அமைவதில் ஆர்வம் காட்டவில்லை. அவை இரண்டும், காங்கிரசுடன் இணக்கம் கொண்டிருந்தாலும், திரிணமுல் காங்கிரசையும், பா.ஜ.,வையும் அறவே பிடிக்காதவை. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, நரேந்திர மோடி பிரசாரக் குழுத் தலைவரானதால், பா.ஜ., பக்கமே சாயும். தி.மு.க., எப்போது எந்தப் பக்கம் சாயும் என்பதை, எவரும் கூறமுடியாது. இந்நிலையில், காங்கிரஸ், பா.ஜ.,விற்கு மாற்றாக, மூன்றாவது அணி அமைவது, வரவேற்பிற்குரியது தான். ஆனால், அது நிலைக்குமா என்பது தான் கேள்விக்குறி.
அணி சேர்ந்துள்ள எல்லாக் கட்சிகளுமே, சின்ன சின்ன காரணங்களினாலேயே காங்கிரஸ், பா.ஜ.,வைப் பிடிக்காமல், மூன்றாவது அணியை உருவாக்க முயற்சிக்கின்றன. திரிணமுல் காங்கிரசிற்கு, முக்கிய எதிரி கம்யூனிஸ்ட்களே அன்றி, காங்கிரஸ் அல்ல. ஐக்கிய ஜனதா தளத்திற்கும், பிஜு ஜனதா தளத்திற்கும், பா.ஜ., நரேந்திர மோடியைத் தேர்தல் பிரசாரக்குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்ததே கோபம்.
அவரை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், பா.ஜ.,வுடனேயே, மீண்டும் கை கோர்க்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகள், மிகக் குறைவு. சமாஜ்வாதி கட்சிக்கு, காங்கிரசா, பா.ஜ.,வா என்ற நிலை ஏற்பட்டால், காங்கிரசையே ஆதரிக்க விரும்பும். உத்தரப்பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதிக் கட்சிக்கு, காங்கிரஸ் அதிக நிதி ஒதுக்கினால், பிணக்கு அகன்று விடும். ஆந்திராவில், தெலுங்கு தேசத்திற்கு பெருத்த ஆதரவு இருப்பதாகவும் தெரியவில்லை. மூன்றாவது அணியை ஏற்படுத்த முயற்சிக்கும் மம்தா பானர்ஜி, ஊழலற்றவர் என்றாலும், முன் கோபக்காரர். பொறாமைக் குணமும், விட்டுக் கொடுக்கும் மனநிலையும் இல்லாத, தடாலடி அரசியல்வாதி. பல்வேறு கருத்துகளைக் கொண்ட கட்சிகளை அணி சேர்த்து, சுமுகமாக வழி நடத்த இந்த குணங்கள் உதவாது. கொள்கைகளை முன் வைத்து, மூன்றாவது அணி உருவாகுமென்றால், நிலைத்து நிற்கலாம். இல்லையேல், சிதறுண்டு போகவே வாய்ப்புண்டு. மூன்றாவது அணி உருவானாலும், உருவாகா விட்டாலும், தேர்தலுக்குப் பின்வரும் நடுவண் அரசு, மாநிலக் கட்சிகளின் ஆதரவின்றி அமையாது என்பது மட்டும் உறுதியானது.



நிதிஷ் குமாரின் ஆசை!
ஆர்.சம்பத்குமார், சென்னையிலிருந்து எழுதுகிறார்: பா.ஜ., தேர்தல் பிரசாரக் குழு தலைவராக, நரேந்திர மோடி, நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் தான், பிரதமர் வேட்பாளராகவும் இருப்பார் என, நினைத்து, தே.ஐ.கூ.,விலிருந்து, ஐக்கிய ஜனதா தளம் வெளியேறி விட்டது. கூட்டணியில் தொடர்வதும், விலகுவதும் அவர்கள் விருப்பம். ஆனால், அவர்கள் கூறும் காரணம் தான், அபத்தமாக இருக்கிறது.
"குஜராத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த மதக்கலவரத்துக்கு, மோடி தான் பொறுப்பு. ஆகவே, அவர், மதச்சார்பற்றவர் என்று கருத முடியாது. எனவே, அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், பீகார் முஸ்லிம்கள், தே.ஐ.கூ.,வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள்' என்கின்றனர். கடந்த இரண்டு பீகார் சட்டசபை தேர்தல்களில், பா.ஜ.,வுக்கு ஓட்டளித்துள்ள பீகார் முஸ்லிம்கள், இப்போது மட்டும் பிறழ்வரா?
"எங்கள் புரிந்துணர்வு, வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் தான்; பா.ஜ., வுடன் அல்ல' என்று கூறியுள்ளார், நிதிஷ். பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமாக, அத்வானி மீதும், வழக்கு நிலுவையில் இருக்கிறதே...
உண்மை என்னவெனில், மற்ற சில பிராந்தியக் கட்சித் தலைவர்களைப் போல, நிதிஷ் குமாருக்கும், பிரதமர் பதவி மேல் ஆசை வந்துவிட்டது. தே.ஜ.கூ.,வில் தொடரும் வரை, அந்த ஆசை நிறைவேற வழியில்லை. எனவே, தனித்துப் போட்டியிட்டு, 20-25 இடங்களை பிடிக்கலாம். தொங்கு பார்லிமென்ட் அமைய வாய்ப்பு இருக்கிறது. அப்போது, பேரம் பேசி, சில நாட்களுக்காவது, சந்திரசேகர், தேவகவுடா, குஜ்ரால் போல பிரதமராக இருக்கலாம் என, நிதிஷ் நினைக்கிறார் போலும். கூட்டாட்சி முன்னணி எனும் யோசனையை, மம்தா பானர்ஜி வெளியிட்டிருப்பது, நிதிஷûக்கு தோதாகி விட்டது; வரவேற்று விட்டார்.
ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும், மூன்றாவது அணி முதல், முப்பதாவது அணி வரை அமைக்க, யாராவது குரல் கொடுப்பர். பின், அது புஸ்வாணமாகிவிடும். கூட்டாட்சி முன்னணியும், தலையெடுக்கப் போவது இல்லை.

புரிந்து கொள்ளாத காங்கிரசார்...
சு.பொன் இருளாண்டி, சின்னமனூர், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கழுதை தரையில் நின்று, கண்ணை மூடி, வானத்தில் தான் பறக்கிறோம் என்று நினைத்து, "ஹா ஹா' என கத்துமாம். பின், கண்ணை விழித்துப் பார்த்தவுடன், தரையில் தான் இருக்கிறோம் என்பதை அறிந்து, "சீ, புஷ்' என்று காற்றை விடுமாம். இவ்வாறு தான், இன்று, காங்கிரசாரின் நிலை உள்ளது.
கர்நாடகத் தேர்தலில், பா.ஜ.,வில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தால், எடியூரப்பாவின் தனிக்கட்சி உருவாக்கத்தால், காங்கிரஸ் வெற்றி பெற்றதே தவிர, பிரதமர் கூறியது போல், ராகுலின் பிரசாரத்தினாலோ, சோனியாவின் பிரசாரத்தினாலோ இல்லை. காங்., தலைவர்களும், அமைச்சர்களும் கூறிக் கொண்டதை போல, மத்திய அரசின் சாதனைகளாலும் இல்லை. இதை, காங்கிரசார் ஏற்றுக் கொள்ளாமல், மீடியாக்களில், "கர்நாடக காங்கிரஸ் பெற்ற வெற்றி, வரும் லோக்சபா தேர்தலிலும் தொடரும்' என்று கூறி வருகின்றனர். மக்கள் எதை விரும்புகின்றனர், எதை புறக்கணிக்க நினைக்கின்றனர் என்பதை எல்லாம், தற்போது முடிந்த குஜராத், பீகார், மேற்கு வங்க லோக்சபா இடைத் தேர்தல்கள் நிரூபிப்பனவாக அமைந்துள்ளன. அரசியல் நோக்கர்கள், இதை, காங்கிரசுக்கு ஏற்பட்ட சரிவாகவே கருதுகின்றனர். ஏனெனில், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள காங்., ஓர் இடத்தில் கூட, வெற்றிக் கனியை ஈட்டவில்லை. மாறாக, இரண்டு, மூன்றாவது இடத்துக்கே தள்ளப்பட்டுள்ளது. "திறமை எவ்விடத்தில் இருந்தாலும், அதை ஏற்க வேண்டும்' என்பதற்கேற்ப, திறமையான நரேந்திர மோடி பிரதமராக வந்தால், நன்றாக இருக்கும் என்ற, பெரும்பாலானோரின் கருத்துக்கு, பீகார் முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும், வருத்தமானது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதை அவர் புரிந்து கொள்ளும் விதமாக, அமைந்துள்ளது, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள, தற்போதைய வெற்றி.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த இடைத் தேர்தல்கள், காங்கிரசுக்கு, அதன், "சாதனைகளுக்கான' வழியைக் காட்டுவதாகவும், நிதிஷ் குமாருக்கு, வருங்காலத்திற்கான வழியைக் காட்டுவதாகவும், நரேந்திர மோ டிக்கு நல்லதொரு வழியைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.